தந்தை பெரியாரும் தாழ்த்தப்பட்டோரும் - 2



ஆதி திராவிடர், தீயர், தீண்டாமை விலக்கு
மாநாடுகளும் தீர்மானங்களும்:


தந்தை பெரியார் அவர்களும், அவருக்குத் துணை நின்றவர்களும் கலந்து கொண்டும், தாங்களே நடத்தியும் தாழ்த்தப்பட்டவர்களின் இழிவு போக்கிய மாநாடுகளைக் காண்போம்.

10.2.1929 இல் சென்னை தீண்டாமை விலக்கு மாநாட்டில் தந்தை பெரியார் பேசினார்:

வெகு காலமாகவே தீண்டாமை என்பது நியாயமானதல்ல என்பதை எடுத்துக்காட்டி அக்கிரமமானதென்பதையும் விளக்கிப் போராடி வந்திருக் கிறோம். ஆயினும் இத்தொல்லை காரியத்தில் நீங்கியதாகத் தெரியவில்லை. எங்கு நிர்ப்பந்தமிருக்கிறதோ அங்கு கொஞ்சம் நீங்கியிருக்கின்றது. மனிதத் தன்மையினாலும், ஜீவகாருண்யத்தை முன்னிட்டும் இத்தீமையை ஒழிக்கவேண்டுமென்று கெஞ்சிக் கேட்டுக் கொள்ளும்போது இத் தீண்டாமை பலமாய் உட்கார்ந்து கொள்வதைக் காண்கிறோம். இத்தகைய தீண்டாமை எனும் தீமைக்கு யாதொரு ஆதாரமும் கிடையாது என்பதை எடுத்துக்காட்டுவதற்கு நாம் சிறிதும் யாரையும் விட இளைத்தவர்கள் அல்ல!

நம் நாட்டில் தீண்டாமைக்கு இடம்கொடுத்துக் கொண்டிருப்பது ஒரு வகையில் சாமியும் மதமும்தான் என்று சொல்ல வேண்டும். சொல்வதெல்லாம் நியாயம்தான், கடவுள் அல்லவா அப்படி படைத்துவிட்டார்.... இனி, உண்மையில் அத்தகைய கடவுளை ஒழித்துவிட்டுத்தான் மறுவேலை பார்க்கவேண்டும். (குடிஅரசு 17.2.1929)
29.9.1935 சேலம் ராசிபுரம் ஆதிதிராவிடர் மாநாட்டில் பெரியார் தலைமையுரை:

அரசாங்கத்தார் வழங்கிய சீர்திருத்தத்தில் உங்களுக்கு சுயமரியாதை உள்ள சீர்திருத்தம் இருந்தது.  அதை தேசாபிமான சீர்திருத்தம் என்னும் பூனா ஒப்பந்தம் பாழாக்கிவிட்டது. பூனா ஒப்பந்தத்தை உங்களில் சிலர் ஆதரிப்பது எனக்கு ஆச்சரியமாய் இருக்கிறது. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் மிக மிக ஆச்சரியமாய் இருக்கிறது. அதாவது நீங்கள் மேல் ஜாதிக்காரர்களைப் போய் ஓட்டுக் கேட்க வேண்டுமாம். மேல் ஜாதிக்காரர்கள் உங்களை வந்து ஓட்டுக் கேட்க வேண்டுமாம். இதில் பரஸ்பர நோக்கம் ஏற்படுமாம்.

இது மைனா பிடிக்கிற வித்தையே ஒழிய இதில் நாணயமோ, அறிவுடைமையோ இல்லை. பார்ப்பனர் அதிகாரியாக இருக்கின்ற கச்சேரிக்குள் நீங்கள் போக வேண்டுமானால் சர்க்கார் உத்தரவும், பொதுத் தெருவில் நீங்கள் நடக்க வேண்டுமானால் பீனல்கோட் சட்டமும் வேண்டியிருக்கிறது. நீங்கள் பார்ப்பன அக்கிரகாரத்தில் நடந்து போய் அவர்கள் வீட்டு வாசல் நடை கடந்து, உள் ஆசாரத்தில் படுத்து வயிற்றைத் தடவிக்  கொண்டிருக்கும் பார்ப்பானிடம் போய் ஓட்டுக் கேட்க முடியுமா?

சென்னை 11ஆவது ஆதிதிராவிடர் மாநாடு - 15.01.1928 இல் நடைபெற்றது.
16.6.1929 கள்ளக்குறிச்சி தென்னார்க்காடு மாவட்ட ஆதிதிராவிடர் மாநாட்டில் திறப்பாளராக இருந்து பெரியார் அவர்கள் ஆற்றிய உரையின் ஒரு பகுதி:

.....மேற்கண்ட மதமும், கடவுளும் வந்து குறுக்கிடுகின்றன. ஆதலால் இந்நிலைக்கு ஆதாரமானதென்று சொல்லப்படும் மதத்தையும், கடவுளையும் எதிர்த்து நின்று அவற்றை அழித்தாலொழிய, வேறு மார்க்கமில்லை என்று பதில் அளிக்கவும் ஒழுக்கமாகவும், தைரியமாகவும், தெளிவாகவும் இருந்தாலொழிய வேறு மார்க்கத்தில் முடியவே முடியாது. அன்றியும் உங்களுக்கு சுயமரியாதை உணர்ச்சி வேண்டும். நாம் ஏன் தாழ்த்தப்பட்டவர்கள்? நாம் ஏன் ஒருவரைச் சாமி என்று கூப்பிடவேண்டும்? நாம் ஏன் ஒருவருக்குப் பாடு படவேண்டும்? என்கிற உணர்ச்சி வரவேண்டும். நீங்களும் மற்றவர்களைப் போல மனிதர்கள்தான் என்று கருதவேண்டும். என்று மனிதர்களாக வாழவேண்டிய வழிமுறைகளை வகுத்துக் கொடுத்தவர் தமிழகத்தில் பெரியார்தாம் என்பதை எவராலும் மறுக்க முடியாது.

அந்த மாநாட்டில் வரவேற்புக் குழுவின் தலைவராக இருந்த திரு.முத்துசாமி பேசுகிறார் கேளுங்கள்:

ஜாதி என்னும் சண்டாளப் பேயையும், தீண்டாமை எனும் கொடிய நோயையும், அடிமைத்தனத்தையும், ஏழ்மைக் கொடுமையையும் இந்நாட்டை விட்டுத் தொலைக்கக் கங்கணம் கட்டிக்கொண்டு தமது உடல், பொருள், ஆவி இம்மூன்றையும் தத்தம் செய்து இரவு, பகல் ஓயாமல் பல இடங்களுக்குச் சென்று பிரச்சாரங்கள் மூலம் மனு அதர்மத்தை, சாஸ்திரக் கொள்கையை ஒழித்து சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் நிலைநாட்டிய பெரியாரே என்று புகழ்ந்து பேசுகிறார். இல்லை உண்மையை உணர்ந்து உரைக்கிறார்.

21.7.1929 சென்னைஆதிதிராவிடர் மாநாடு:

நமது சுயமரியாதை இயக்கம் ஏற்பட்டு இரண்டு, மூன்று வருடங்களே ஆனாலும், அது நமது நாட்டில் ஒருவித உணர்ச்சியை உண்டாக்கி இருக்கின்றது.  அநேக விஷயங்களில் கடுமையான எதிர்ப்புகள் மறைந்துவிட்டன. சாமியையும், சாத்திரத்தையும் தொட்டதற்கெல்லாம் முட்டுக்கட்டையாக்கிக் கொண்டு வந்து போட்டுக்கொண்டிருந்தார்கள். அதை ஒருவிதத்தில் மறைத்துக் கொண்டு பழக்கம், வழக்கம் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். சாமி, மதம், சாத்திரம் என்கின்ற முட்டுக்கட்டைகளை இன்னமும் தைரியமாக உடைத்தெறியத் துணிந்து விட்டோமேயானால் பழக்க வழக்க முட்டுக்கட்டைகளை பஞ்சாய்ப் பறக்கச் செய்துவிடலாம்.

25.8.1929 - இராமநாதபுரம் ஆதிதிராவிட மாநாட்டில் திராவிடன் ஆசிரியர் ஜனக சங்கர கண்ணப்பர் தலைமையுரை:-

உங்களைத் தாழ்மைப்படுத்துவது பிராமணர் மட்டுமல்ல, பிராமணர்களைவிட பிராமணரல்லாதவரே, உங்களை மிகக் கடுமையாக நசுக்குகிறார்கள் என நண்பர் இராமச்சந்திரன் கூறினார். அது உண்மைதான். பிராமணர்கள் உண்மையான புலிகள்; பிராமணரல்லாதார் அல்லாசாமிப் புலி, போலிப் புலி, மனிதப் புலிகள். உண்மைப் புலிக்கு மனிதர் பயமுண்டு. அது குகையிலேயே இருக்கிறது. இப்பொழுது ஆடி பயமுறுத்துவது அல்லாசாமிப் புலிதான். உண்மைப் புலிக்கு ஒரு வெள்ளாடு போதும், அதை ஏழெட்டு நாள்களுக்குச் சிறிது சிறிதாகச் சாப்பிட்டுக் கொள்ளும் புலி. ஆனால் அல்லாசாமிப் புலிக்கு, பொய்ப் புலிக்குத் தினந்தோறும் 30, 40 ஆட்டுக்குட்டியின் இரத்தம் வேண்டும். நமக்கு எதிரியாய் பிராமணரல்லாதாரே இருக்கும்போது நாம் எப்படி முன்னேற முடியும்? என்று வேறுபாடுகளை விளக்கிச் சொன்னார்.

(குடிஅரசு 13.10.1929) 1.10.1929 அன்று நடைபெற்ற 2ஆவது ஆதி திராவிட மாநாட்டில் .பொன்னம்பலனார் ஆற்றிய தலைமையுரை வருமாறு:
இதுபோலுள்ள குறைபாடுகள் நீங்கி முன்னேற்றமடைய வேண்டு மானால் உங்களை இழிவுபடுத்தச் செய்கின்ற சில மூடப்பழக்க வழக்கங்களை விட்டுவிட வேண்டும். அதாவது சாமியாடுதல், வேல் தாங்குதல், மரம் ஏறுதல், காப்புக் கட்டிக்கொள்ளுதல், எல்லைச்சட்டி உடைத்தல், பிரார்த்தனை செய்தல், காணிக்கை போடுதல், காளி, மாரி, வீரன், கருப்பன் பூசை போடல், கோவில் கட்டுதல், உற்சவம் செய்தல் போன்ற கண்மூடித்தனங்களும் நாம் மனிதப் பிறவியிலேயே கடைப்பட்டவனாக - தீண்டத்தகாதவனாக கல்வியின்றி, உணவின்றி, உடையின்றி, இடமின்றி, தொழிலின்றி, நாடு விட்டு, கிராமம் விட்டு கப்பலேறிப் போய்த் தோட்ட வேலை செய்யவும், பிறந்த நாட்டிலிருந்து உழைத்த உழைப்புக்குக்கூட கூலி கேட்கப் பயந்து கொடுத்ததைப் பெற்று, அதிலும் பாதிக் கள்ளைக் குடித்து விட்டு கண்கலங்கி நிற்கவும், பெண்டு பிள்ளைகள் துன்புற்று நிற்கவும் பாடைகட்டியும், பிணஞ்சுடவும், பறையடிக்கவும், செத்த மாடு புதைக்கவும் உயிர் மடிய வேண்டியதுதான். பறையன் பறையன்தான், பார்ப்பான் பார்ப்பான்தான் என்ற பகுத்தறிவற்ற பல்லவி பாடி தன்னம்பிக்கையற்று தயங்கவேண்டியதில்லை.

30.3.1930 தலைச்சேரி தீயர்கள், நாடார்கள் மாநாட்டில் று... சவுந்திர பாண்டியன் .டு.. தலைமையுரை.

தென்னை மரங்களில் பாளை சீவுவது என்பது தொழில் என்ற முறையில்  தாழ்மையானதல்ல என்பதையும், பாவமல்லவென்பதையும் கூற விரும்புகிறேன். ஆனால், கள்ளுக்காகச் சீவுவதென்பது பாராட்டக் கூடியதல்ல. உங்கள் ஜாதியைப்பற்றிய கதைகளில் நீங்கள் பாளை சீவவேண்டுமென்பதும், கள் குடிக்க வேண்டுமென்பதும் கடவுள் ஆணை என்று குறிப்பிட்டிருப்பதாகக் கேட்டு ஆச்சரியப்பட்டேன். இதைவிட முட்டாள்தனம் வேறு எதுவும் இருக்கமுடியாது.

தீவார் என்பது தீவில் வாழ்பவர்கள் என்று பொருள். ஆதியில் நீங்கள் தீவார் என்றுதான் அழைக்கப்பட்டீர்கள். தீவார் என்பது மருவி தீயராயிற்று.

10.6.1930 - திருநெல்வேலி தீண்டாமை விலக்கு மாநாட்டில்,
தமது வரவேற்புரையில் திரு.சங்கராயர் அவர்கள் குறிப்பிட்டதாவது: சமத்துவம், சகோதரத்துவம், சுயாதீனம் என்பவைகள் சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படையான உயிர்க்கொள்கைகள். எல்லா ஜாதியாரும் சமம், ஜாதிக்கொடுமைகளும், துவேஷங்களும், ஜாதிக்கு ஒரு நீதி வகுக்கும் வருணாசிரம தர்மமும் சுயமரியாதைக்காரர்களால் சினந்து கண்டிக்கப்படும். தன் சுயமரியாதையுள்ள பிறனையாவது பிற ஜாதிகளையாவது சூத்திரன் என்றும், பறையன் என்றும் இகழ்ந்து பேசுதல் வெறுக்கத்தக்கது. சூத்திரன் என்ற பதத்திற்கு அடிமை, முட்டாள், தாசிமகன் என்ற பொருள் ஸ்மிருதி கூறுகின்றது. அந்த ஸ்மிருதியைத் தழுவி அமைந்திருக்கின்ற இந்து லாவில் சூத்திரருக்குப் பாதகமான சட்டங்களும் மற்ற வைசிய க்ஷத்திரிய பிராமணர் என்ற பூணூல் அணிந்தவர்களுக்கு அனுகூலமான சட்டங்களும் அமைந்திருக்கின்றன.

16.5.1931 - சேலம் ஆதிதிராவிட மாநாட்டின் தீர்மானம்:

காங்கிரசானது தீண்டாமை விலக்கு விஷயமாக 1921ஆம் வருஷத்தில் செய்த தீர்மானத்தின் பேரில் இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறது என்பதைக் குறித்து ஓர் அறிக்கை வெளியிடவேண்டும். திரு.காந்தி லண்டன் மாநாட்டுக்குச் செல்லுமுன் இந்து, முஸ்லிம் பிரச்சினையைத் தீர்க்க எவ்வளவு பாடுபடுகின்றாரோ, அது போலவே தீண்டாமைக் கொடுமையை ஒழிக்க முயற்சி எடுக்கவேண்டுமென்றும், அரசியலமைப்பில் தாழ்ந்த வகுப்பினருக்கு தனித்தொகுதியே ஏற்பாடு செய்யும்படியும் சர்க்காரைக் கேட்டுக்கொள்வதாகவும் தீர்மானம் இயற்றியது.

குடி அரசு 7.6.1931-இல் வெளியான லால்குடி தாலுகா ஆதி திராவிட மாநாட்டில்:

30.5.1931இல் நடைபெற்ற மாநாட்டில் வரவேற்புக் கமிட்டித் தலைவர் முத்துசாமி தந்தை பெரியார் அவர்களைக் குறிப்பிட்டுக் கூறியதாவது:
தங்களுடைய சமதர்மக் கொள்கைக்கு விரோதமாய் அநேக எதிர்ப்புகள் அடிக்கடி சம்பவித்த போதிலும், எதிர்பாராத புதிய, புதிய எதிரிகள் தங்களுக்குத் தோன்றிய போதிலும், தாங்கள் ஆரம்பித்த புரட்சி இயக்கமானது உண்மை அன்பின் இயக்கமாக இருக்கிறபடியால் நாடெங்கும் காட்டுத்தீபோல பரவிக்கொண்டு வருகிறது என்று அய்யாவின் பணியை மெச்சிப் புகழ்ந்தார்.

5.7.1931 - திருச்சி ஆதிதிராவிட மாநாட்டில்:

சென்னை ஜஸ்டிஸ் பத்திரிகை ஆசிரியர் திரு.டி..வி. நாதன் அவர்கள் தலைமையில் மாநாடு கூடிற்று. திரு..வையாபுரி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

புதிய அரசியலில் இந்துக்கள் ஆதிக்கத்தில் இருந்து தப்புவதற்கு கிறித்துவர்கள், முஸ்லிம்கள், ஆதிதிராவிடர்கள் ஆகிய சிறுபான்மையோர் ஒன்று சேர்ந்து கொள்ள வேண்டும். இந்த மூன்று கூட்டத்தாருக்குமாக ஒரு மாநாடு சீக்கிரத்தில் கூட்டவேண்டும்.
காங்கிரசு தீண்டாமையை ஒழிக்க செய்கையில் ஒன்றும் செய்யாததால் விசனிப்பதுடன், சீக்கிரம் தீண்டாமை ஒழிக்கப்படாவிட்டால், தாழ்த்தப்பட்ட வர்கள் அனைவரும் இஸ்லாம் மதத்தைத் தழுவ வேண்டும்  என்று நாதன் அவர்கள் தமது தலைமையுரையில் கூறினார்.

5.7.1931 - கோவை ஆதிதிராவிட மாநாட்டில் தலைமை வகித்த திரு. வி.அய். முனுசாமிப்பிள்ளை அவர்கள் குறிப்பிட்டதாவது:

சென்ற வருஷந்தான் சிங்காநல்லூரில் தாழ்த்தப்பட்டவர்கள் மேல்ஜாதிக்காரர்களால் பல கஷ்டப்பட்டார்கள். அவர்கள் வீடுகள் பிரிக்கப்பட்டு அடிபட்டு ஆஸ்பத்திரியில் கிடத்தப்பட்டார்கள். வீதியில் நடக்க உரிமை கொண்டாடியதாலேயே இந்தக் கொடுமை ஏற்பட்டது. இவர்களுடைய சுயராஜ்யக் கவர்ன்மெண்டில் இன்னும் என்னென்ன நடக்கும் என்று யோசித்துப் பாருங்கள். இவைகளுக்குக் காங்கிரசும் சுயராஜ்யமும் என்ன செய்தன?

4.7.1931  - தஞ்சை ஜில்லா ஆதிதிராவிட மாநாட்டில்
சகஜாநந்தம் தமது தலைமையுரையில் கூறியதாவது:-

ஏற்கெனவே ஜாதி துவேஷம் கொண்டு கொடுமை செய்யும் வகுப்பாரிடம் பொறுப்பாட்சி கொடுத்தால் ஆதிதிராவிடருக்கு இன்னும் அதிக ஆபத்துதான். கும்பகோணம் மேல்ஜாதிக்காரர்கள் கூட்டத்தில் மகாத்மா காந்தி தீண்டாதவர்கள் நுழைய அனுமதிக்காத கோயில் பறிமுதல் செய்யப்படும் என்று சொன்னதைக் கண்டித்துத் தீர்மானம் செய்து ஆதிதிராவிடர் கோயில் பிரவேசம் இல்லை என்று தீர்மானித்தார்கள். இவர்கள் வசமும் இவர்கள் பிள்ளை குட்டிகள் வசமும் சுயராஜ்யம் வந்தால் இவர்கள் என்ன செய்யமாட்டார்கள்? ஆகவே தீண்டாமையை அடியோடு ஒழித்த பிறகு சுயராஜ்யம் வேண்டுமென்று சொல்லுகிறேன் என்று விளக்கினார்.

7.12.1931 - கோவை ஆதிதிராவிட மாநாட்டில் -

மாநாட்டின் தலைவர் முனுசாமிப் பிள்ளை பேசியதாவது: தாழ்த்தப் பட்டவர்கள் இந்தியர்கள் என்று தெரிந்த போதிலும் ஒரு தரத்தார் நம்மீது அவநம்பிக்கைக் கொண்டு நமக்கு எச்சரிக்கைகள் செய்ய ஆரம்பம் செய்கிறார்கள். நமக்கு சுதந்திரம் வேண்டும்; அதை நாம் விரும்புகிறோம் என்பதில் யாதொருவிதமான சந்தேகமும் கிடையாது. ஆனால், நம்மைக் கட்டுப்படுத்தி கீழ்ப்படுத்தும்படியான சுதந்திரம் நமக்குத் தேவையில்லை என்று விளக்கமளித்தார். எனவே, பார்ப்பான் கையில் சிக்கிய சுதந்திரம் வேண்டாமென்றுதான் அன்றைக்கு விளக்கமளித்துள்ளார்கள்.

குடிஅரசு 7.2.1932  - லால்குடி தீண்டப்படாத கிறித்துவர் மாநாட்டில்-

23.1.1932இல் நடைபெற்ற மாநாட்டுத் தீர்மானத்தைத் தருகின்றோம். தீர்மானம் - 11: பொதுஜன நன்மைக்காக கவர்ன்மென்ட் ரஸ்தாக்களில் கவர்ன்மென்ட் லைசென்ஸ் பெற்று ஓடும் கார், பஸ், வண்டி முதலிய வாகனங்களில் தாழ்த்தப்பட்ட மக்களை ஏற்றிக்கொள்ளும்படிக்கு இராமநாதபுரம் ஜில்லா போர்டில் பிறப்பித்த உத்தரவுபோல் நமது ஜில்லா போர்டிலும் உத்தரவு பிறப்பிக்க ஜில்லா போர்டு தலைவரையும் அங்கத்தினர்களையும் மிக வணக்கத்துடன் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது என்று உரிமை முழக்கம் செய்தது.

28.8.1932 - அருப்புக்கோட்டை தாலுகா தாழ்த்தப்பட்டோர் மூன்றாவது மாநாட்டில், ..புன்னைமுத்து பேசியது:

சுயமரியாதை இயக்கமானது உலக முழுவதும் அறிவாளர்களிடம் செல்வாக்குப் பெற்றிருக்கிறது. ஒருவரை ஒருவர் வஞ்சித்து வாழவேண்டுமென்று சூழ்ச்சியோ ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதி வழங்கும் அநியாயமோ கருப்பர் வெள்ளையர் என்ற நிற பேதமோ தன் நாட்டார், அயல் நாட்டார் என்ற பாகுபாடோ ஏழை - பணக்காரர் என்ற வித்தியாசமோ உயர்வு - தாழ்வு வேற்றுமைகளைக் கற்பிக்கும் ஜாதிபேதமோ, - இந்தச் சுயமரியாதை இயக்கத்தில் இல்லை. இந்த இயக்கமானது அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும் அனுபவத்திற்கும், காரியத்திற்கும் உதவாத எந்தக் கொள்கைகளையும், ஸ்தாபனங்களையும், பின்பற்றுவதோ, பராமரித்து வருவதோ, அவைகளுக்கு முயற்சி எடுப்பதோ வீண்வேலை என்று கருதுகிறது.

குடிஅரசு 7.5.1933  - லால்குடி தாலுகா ஆதி திராவிட கிறித்துவர் மாநாட்டில்:

23.4.1933இல் நடைபெற்ற மாநாட்டை பெரியார் திறந்து வைத்து உரையாற்றியது: உங்களுக்கு மதப்பித்தின் காரணமாக சுயமரியாதை உணர்ச்சி இல்லை என்பதை உங்கள் பாதிரிமார்கள் நன்றாய் உணர்ந்திருக்கிறார்கள். கட்டுப்பாட்டை மீறி நீங்கள் ஏதும் செய்யமாட்டீர்கள் என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும். நீங்களும் மதத்திற்காகவும், கடவுளுக்காகவும் எவ்வளவு கஷ்டங்களையும், இழிவுகளையும் பொறுத்துக்கொண்டு வெறும் வாயினாலே மாத்திரம் எதையாவது பேசிக்கொண்டிருப்பீர்களே ஒழிய கட்டுப்பாடுகளை மீறவோ, உங்கள் இழிவுக்குக் காரணமானவற்றை உதறித் தள்ளவோ, அதை அழிக்க முயற்சிக்கவோ ஒருநாளும் சம்மதிக்கமாட்டீர்கள்.

7.8.1933 - சென்னை தாழ்த்தப்பட்ட கிறித்துவர் மாநாட்டில் -

புதுவைத் தோழர் அல்போன்ஸ் டிகால் உரையாற்றியதாவது: கிறித்துவ மார்க்கத்திலுள்ள ஆபாசங்கள் இந்து மதத்திலும் மற்ற எந்த மதத்திலும் கிடையாது. நாட்டுக்கு நன்மை என்று ஏற்பட்ட கிறித்துவ மார்க்கத்தை பின்னால் வந்தவர்கள் தங்களுக்கு வேண்டியவாறு தம் மூடமதியைப் புகுத்தி சுயநலத்திற்காக அநேக ஏற்பாடுகள் செய்து கொண்டு வந்திருக்கிறார்கள்.

நாம் முன்னேற்றம் அடைய வேண்டுமானால் இந்த ஆபாசமான மதத்தையும், மதத் தலைவரையும், கடவுள் நம்பிக்கையையும் ஒழிக்க வேண்டுமென்பது என் அனுபவத்தில் கண்ட உண்மை.

9.7.1935 தஞ்சை ஜில்லா 3 ஆவது ஆதி திராவிட மாநாட்டில் -

தோழர் சாமியப்பா அவர்களை தலைமையேற்க முன்மொழிந்து கே.வி.அழகர்சாமி பேசும்போது, தஞ்சை ஜில்லா போர்டில் தோழர் சாமியப்பா ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாக தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கு எல்லாத் துறைகளிலும் செய்த தொண்டைப் பாராட்டிப் பேசினார். ஆமோதித்துப் பேசியவர்களில் தோழர் .வெ.ராமசாமி அவர்கள் தோழர் சாமியப்பா அவர்கள் பொதுவாக பிராமணரல்லாதாருக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் செய்த சேவையைப் புகழ்ந்ததோடு பிராமணர்களுக்கு அடுத்தபடியாக சொல்லப்படும் சமூகத்திலுதித்தவரும் தாழ்த்தப்பட்டவர்களைக் கொடுமைப்படுத்துவதில் முதல் பட்டம் பெற்ற சமூகத்தில் உதித்தவருமான சாமியப்பா ஆதிதிராவிடர் மாநாட்டிற்குத் தலைமை வகிப்பதே தியாகமாகும் என்றார்.

10.7.1935 - சீர்காழி ஆதிதிராவிட மாநாட்டில் - தலைமையுரை ஆற்றிய ஆர்.அன்னபூரணி அம்மாள் பேசியதாவது:

ஜாதி சமயங்களின் பேரால் தீண்டாமை அனுஷ்டிக்கப்பட்டு வருவதாக கூறப்படினும், உண்மையில் தீண்டாமை அனுஷ்டிக்கப்படுவதால் சமயமும் ஜாதியும் காப்பாற்றப்படவில்லை. இது உறுதி, தீண்டாமை இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஜாதிக்கும் சமயத்துக்கும் ஆபத்து ஒன்றுமில்லை என்பது வைதீகர்களுக்கு நன்றாகத் தெரியும். ஏனென்றால் தீண்டாமை இல்லாமலேயே பல ஜாதி மதம் உலகில் வாழ்கின்றன. இதை அறிந்து கொண்டுதான் இந்து மகாசபையும் தீண்டாமை ஒழிக என்று பேச்சளவிலாவது தீர்மானம் செய்யத் துணிந்துவிட்டது. (குடிஅரசு 21.7.1935)

7.3.1936 - திருச்செங்கோடு ஆதிதிராவிட மாநாட்டில் -

உங்களில் சில பார்ப்பனக் கூலிகள் பிரிட்டிஷ் அரசாங்கம் உங்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்றும், பார்ப்பனரல்லாதோர் கிளர்ச்சி உங்களுக்கு  ஒரு நன்மையும் செய்யவில்லை என்றும் கூறி பார்ப்பனர்களிடம் கூலி பெற்று வாழ்வார்கள். அந்தக் கூட்டம் உங்களில் மாத்திரமல்ல எங்களிலும் இருக்கிறார்கள். ஆதலால் ஓர் அளவுக்கு அப்படிப்பட்டவர்கள் வாழ்க்கைக்கு இடம் கொடுத்துத்தான் ஆகவேண்டும்..... இந்த உரிமை கிடைத்ததற்குக் காரணம் சுயமரியாதை இயக்கத்தின் கிளர்ச்சியேயாகும். எப்படியெனில் அவர்களுடைய குறைகள் இங்கிலாந்து பார்லிமெண்டுக்குத் தெரியக்கூடாது என்பதற்காகவே பார்ப்பனர்கள் சைமன் கமிஷனை பகிஷ்கரிக்க சூழ்ச்சி செய்தார்கள். அது சுயமரியாதைக்காரர்களிடம் பலிக்கவில்லை என்று பெரியார் தலைமையுரையில் கூறினார்.

23.5.1936 - கொச்சி தீயர் மாநாட்டில் தலைவர் பெரியார் உரையாற்றியதைப் பற்றிய குறிப்பு வருமாறு:

தோழர் .வெ.ராவின் உபன்யாசம் அக்கூட்டத்தை ஒரே கட்டாகக்கட்டி வசீகரித்துவிட்டது. அவர்களில் 100-க்கு 100 பேரும் நாஸ்திகர்கள் என்று சொல்லத் துணிந்து விட்டார்கள். இதுவரை தீயர் சமுதாயத்தில் பல மாநாடுகள் கூட்டி மதங்களைக் கண்டித்தும், குறிப்பாக இந்து மத ஊழல்களையும், சூழ்ச்சிகளையும் வெளியாக்கி பல தீர்மானங்கள் செய்து வைத்திருக்கிறார்கள் என்றாலும் இது கொச்சி சமஸ்தான தீயர் சமூகப் பொது மாநாட்டின் தீர்மானமாகும்.

3.8.1936 பெரியகுளம் தாலுகா தேவேந்திர குல மாநாட்டில் வரவேற்புக் குழுவின் தலைவர் வீ.ஜெயராஜ் பேசியதாவது:-

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என்று விடுதலையோ அன்றே பார்ப்பனர் அல்லாதோர்க்கும் விடுதலை. பார்ப்பனரல்லாத மக்களுக்கு என்று விடுதலையோ அன்றே பார்ப்பனருக்கும் விடுதலை. ஆகவே, ஏழை மக்களான, ஊமைகளான, மிருகத்திற்கும் கேடாக நடத்தப்படுபவர்களான தாழ்த்தப்பட்ட மக்களுக்கு விடுதலை கிடைத்தால்தான் இந்தியாவும் விடுதலையடையும். நீங்கள் எந்த அளவினால் பிறத்தியாருக்கு அளக் கிறீர்களோ அந்த அளவினால்தான் உங்களுக்கும் அளக்கப்படும் என்பது முதல் சமூகச் சீர்திருத்தவாதியான சிறீகிறிஸ்த்துபிரானின் பொன்மொழி.

2.9.1936 - சேலம் ஜில்லா ஆதி திராவிட 6-ஆவது மாநாட்டில் தலைமை வகித்த சேலம் ஜெகதீச செட்டியார் உரை......

இந்நாட்டில் எங்கு பார்த்தாலும் பல மாநாடுகளைக் கூட்டி தாழ்த்தப் பட்ட மக்கள் என்பவர்கள் சுதந்திரம் பெற வேண்டும். சுயமரியாதை பெற வேண்டும் என்று சுமார் பத்து வருஷகாலமாகத்தான் வெளிப்படையாகக் கிளர்ச்சி செய்ய சந்தர்ப்பம் பெற்றிருக்கிறீர்கள். தற்காலத்தில் ஒவ்வொரு தேசத்திலும் சுதந்திர உணர்ச்சி மிகுதியும் நிலவுகின்றது. நாகரிக வளர்ச்சிக்கு ஏற்ப சுதந்திர வேட்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஒரு தேசம் அல்லது சமூகம் எவ்வளவு காலம்தான் அடங்கி ஒடுங்கி உணர்ச்சியற்று இருக்கமுடியும்? உணர்ச்சியற்றிருக்கும் வரை பிறநாடுகள், அல்லது பிறசமூகங்கள் அவ்வுணர்ச்சியற்ற நாடு அல்லது சமூகத்தின் முதுகிலேறி சவாரி செய்யலாம்.

6.5.1937 - சிதம்பரம் ஆதி திராவிட மாநாட்டிற்குப் பிறகு திவான்பகதூர் ஆர்.சீனிவாசன் அறிக்கை:

தாழ்த்தப்பட்டவர்களுக்குத் கொடுமை செய்த காங்கிரஸ்காரர்கள் சில இடங்களில் ஷெடியூல் வகுப்பார் தங்கள் இஷ்டப்படி ஓட்டளிக்க விடவில்லை. பூனா ஒப்பந்தத்தை கவுரவிப்பதற்குப் பதிலாக அது அப்படியே மோசம் செய்யப்பட்டது. அந்த ஒப்பந்தத்திற்கு மாறுபாடாக ஜாதி இந்துக்கள் தலையிட்டு மேற்படி ஷெடியூல் வகுப்பாரின் உண்மையான பிரதிநிதிகள் தேர்தலில் வெற்றிபெற வொட்டாமல் தடுத்துவிட்டனர். காங்கிரஸ் மற்றெல்லா கட்சிகளையும்விட பூனா ஒப்பந்தத்தில் கண்ணியமாக நடந்து கொள்ளும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், நாங்கள் ஏமாற்றமடைந்தோம்.
ஒரு காந்தியாருடைய உயிரைவிட 6 கோடி தாழ்த்தப்பட்ட மக்களின் உயிர் உமது கையில் இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள் என்று தந்தை பெரியார் அய்ரோப்பாவிலிருந்து தந்தி கொடுத்தது நினைவில் கொள்ளவேண்டியதாகும்.

4.7.1937 ஆம்பூர் ஆதி திராவிட மாநாட்டில் பெரியார் பேசுகிறார் மனு காலத்திலோ, ராமன் கிருஷ்ணன், அரிச்சந்திரன், பாண்டியன், நாயக்கர் காலத்திலோ ஒரு பறையர் என்பவர் அரசியல் மந்திரியாக வந்துவிட முடியுமா? அல்லது எந்த ஒரு தெய்வம் என்பதுதான் ஆகட்டும், நேரிலேயே வந்து நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாவதாயிருந்தாலும், பறையன், புலையன் என்பவர்கள் அதுவும், குரங்குப் பிடியாக வைதீகமும், வருணாசிரம பைத்தியமும் கொண்ட கேரள தேசத்தில் அதுவும் பார்ப்பானுக்குப் பிறந்தால் உயர்பதவி என்று ஆணும், பெண்ணும் எண்ணிக்கொண்டு பறையன் கண்ணில் கண்டாலும் அவன் நிழல் மேலே பட்டாலும், அவன் பேச்சு காதில் விழுந்தாலும் பாவம் என்று கருதும் மக்களையும் அரசியலையும் கொண்ட கேரள தேசத்தில் கோயிலுக்குள் பறையன் போகவேண்டும் என்றால் இது சாத்தியப்படக்கூடியது என்று யாராவது எதிர்பார்க்கக்கூடிய காரியமா என்று பாருங்கள். இந்தக் காரியம் நம் காலத்தில்தான் நடந்தேறியிருக்கிறது.  - குடிஅரசு 18.7.1937 

(நூல் - தந்தை பெரியாரும்  தாழ்த்தப்பட்டோரும்! ஆசிரியர் தஞ்சை ஆடலரசன்)

Comments

Popular posts from this blog

தந்தை பெரியாரும், தாழ்த்தப்பட்டோரும் - 1

தந்தை பெரியாரும் தாழ்த்தப்பட்டோரும் - 9

ஜாதியை உருவாக்கியவர்கள் ஆரியர்களா? வடுகர்களா?