தந்தை பெரியாரும் தாழ்த்தப்பட்டோரும் - 3



ஜாதி - தீண்டாமை ஒழிப்பே
திராவிடர் இயக்கத்தின் கொள்கை


குடி அரசு 1.8.1937 - திருச்செங்கோடு தாலுகா - ஆதிதிராவிட மாநாட்டில் -
8.7.1937இல் நடைபெற்ற திருச்செங்கோடு மாநாட்டில் தலைவர் சேலம் எம்.கே.ரங்கசாமி பேசியது:

இன்று ஆதிதிராவிடர்களுக்கு செய்கையில் தீண்டாமையைப் போக்கப் பாடுபட்ட கட்சிகள் ஜஸ்டிஸ் கட்சியும், சுயமரியாதைக் கட்சியுமே என்று நாம் முக்காலும் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். தீண்டப்படாதவன், தொடப்படாதவன், பார்க்கப்படாதவன் என்று சொல்லப்பட்டு வந்த நம்மை சட்டசபைகளிலும், ஸ்தல ஸ்தாபனங்களிலும் உட்காரும்படி செய்த கட்சி எது? உத்தியோகங்களில் விகிதாச்சாரப்படி கிடைக்க இடமுண்டாக்கிய கட்சி எது? என்பன போன்றவைகளை நாம் எண்ணிப் பார்ப்போமேயானால் உண்மையாக ஜஸ்டிஸ் கட்சிக்கு நன்றி காட்ட கடமைப்பட்டவர்கள் ஆதிதிராவிடர்களே என்பதை உணரமுடியும். காங்கிரஸ் நமக்கு நன்மைதான் செய்யவில்லை என்றாலும் தீமையாவது செய்யாதிருந்ததா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.

3.1.1938 - அருப்புக்கோட்டை தாழ்த்தப்பட்டோர் மாநாட்டில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டதைத் தருகிறோம்.

தீண்டாமை என்று மக்களைக் கேவலமாய் நடத்தி வருவதை சட்டம் மூலமாய் தடுத்து பொது இடங்களில் தீண்டாமை வித்தியாசங்கள் காட்டாமல் இருக்கவேண்டுமென்றும், மேல்படி வித்தியாசம் காட்டும் நபருக்கு தலா 6 மாத தண்டனை என்று சீக்கிரம் சட்டம் செய்யும்படியும் காங்கிரஸ் மந்திரிசபையைக் கேட்டுக்கொள்வதாகத் தீர்மானிக்கிறது.

இப்படி பல்வேறு மாநாடுகளில் கலந்துகொண்டு உரையாற்றியும், அவைகளைத் தாம் நடத்தி வந்த குடிஅரசு ஏட்டின் மூலம் மக்களுக்கு எடுத்துரைத்தும் வந்துள்ளார். இப்படி மானுடப் பற்றாளராக விளங்கிய பெரியார் அவர்கள் உரிமைகளைப் பெறுவதற்குப் போராடிய நிலையைப் பாருங்கள்.

மனித உரிமைகளைப் பெற சர்க்கார் தடையையும் மீறுவோம்; தாழ்த்தப்பட்டோரை ஒதுக்கி வைப்போர் திராவிடர் இயக்கத்தின் எதிரிகள் - திருமங்கலத்தில் பெரியார்
 
சுயமரியாதை, திராவிட இயக்கக் கிளர்ச்சியால் இரயில்வே ஸ்டேஷன்களிலுள்ள ஜாதி வித்தியாசத் தடைகளும், ஓட்டல்களிலுள்ள ஜாதி வேறுபாடு முறைகளும் அறவே ஒழிந்துவிட்டன - விடுதலை 5.4.1947
 
ஜாதிகளை ஒழிப்பதே திராவிடர் இயக்கத்தின் அடிப்படைக் கொள்கை. நம் இயக்கமும் பழங்குடி மக்களும் நகமும் சதையும் போல.
- திருச்சியை அடுத்த மான்பிடிமங்கலத்தில் பெரியார்.

திராவிடர்களில் ஜாதி ஆணவம் படைத்த உயர்ஜாதிக்காரர்களும்  இல்லாமல் இல்லை. இனி அவர்களை எப்படி வழிக்குக் கொண்டுவருவது என்பதும் எனக்குத் தெரியும். ஆகவே, ஒரே இனத்தைச் சார்ந்த நாம் நமக்குள் பிரிவுகளாக, சொல்லளவிலும் இருக்கக்கூடாது என்பதே எனது தீவிர எண்ணமாகும். இன்னும் விளக்கமாகக் கூறுகிறேன் திராவிட இயக்கத்திற்கு முக்கியக் கொள்கை என்னவென்பதை, இந்த நாட்டில் பறையன் என்றும், பார்ப்பான் என்றும், உயர்ந்த ஜாதிக்காரன், தாழ்ந்த ஜாதிக்காரன் என்றிருப்பதையும், சூத்திரன், பஞ்சமன் என்றுமிருப்பதையும் அறவே ஒழித்து எல்லோரும் ஓர் இனம், எல்லோரும் ஒரே சமுதாய மக்கள் என்னும் கொள்கையை நடைமுறையில் செய்வதேயாகும்.
- பெரியார் விடுதலை 8.7.1947.

நம் நாட்டிலுள்ள தாழ்த்தப்பட்டோரின் தலைவர்கள் என்று  கூறிக் கொள்பவர்களே தாழ்த்தப்பட்டோரின் விடுதலையையே குறிக்கோளாகக் கொண்டுள்ள திராவிடர் இயக்கத்தையும், திட்டத்தையும், என்னைப் பற்றியும் வீணாகப் பழிக்கின்றார்கள் என்றால் வடநாட்டுப் பிடிப்பிலுள்ள டாக்டர் அம்பேத்கரைப் பற்றி நாம் குறைகூற முடியுமா?

என்னையோ, அல்லது திராவிடர் இயக்கத்தையோ வீணாகக் குறை கூறினாலும், இல்லாவிட்டாலும் ஒன்று கூறுகிறேன். தோழர்களே! திராவிடர் இயக்கம் தனது கடைசி மூச்சிருக்கும் வரையில் இந்த நாட்டில் பள்ளன், பறையன் என்ற இழிஜாதிகளை ஒழித்து அவர்களை முன்னேற்றவே உழைக்கும் என்ற உறுதியை வழங்குகிறேன். தாழ்த்தப்பட்டோர் பெடரேஷனில் சேருவதை யான் இன்னும் வேண்டாமென்று கூறவில்லை. அதில் வரும் நன்மைகளையும் நீங்கள் அடையுங்கள்.

திராவிடர் கழகத்தில் தாழ்த்தப்பட்டோர் சேர்ந்தாலும் சேராவிட்டாலும், அதன் உழைப்பின் பலனை தாழ்த்தப்பட்ட தோழர்களுக்கு அனுபவிக்க உரிமை உண்டு. (பெரியார் - விடுதலை 8.7.1947)
தீண்டாமையை ஒழிக்க இவைகள் போதாதென்று கவிதைகள் பல குடிஅரசு ஏட்டில் வெளிவந்துள்ளன. அவைகளிலே சிலவற்றை இங்கே தருகிறோம்.

பாலசாமி இயற்றிய ஆனந்தக் களிப்பு (குடிஅரசு 9.3.1930)

தீண்டாமை என்னும் பேயை ஓட்டி - நம்
தீண்டப்படாதவர் மீதன்பு காட்டி
எல்லோரும் ஒன்றென்று கருதி-கூடி
இருந்து வாழ்ந்தால் சுயராஜ்யம்-உறுதி
கடவுள் சொன்னாரென்றால் வேதம் என்ன
காரணம் மனிதரில் பலவித பேதம்
சாத்திரம் மதம் இதிகாசம் - நம்மைத்
தாழ்த்துவதாலே நம் பாதே ஆபாசம்
6.12.1936 - அடிமை தொலைக - மு.அண்ணல் தங்கோ (குடியேற்றம்):
எங்களடிமைத்தனம் ஒழிவ தெந்நாளோ?
ஏமாற்று மாரியர்கள் சூழ்ச்சி பொய்க்காதோ?
மங்கையர்கள் உரிமை பெறுவதெந்நாளோ?
மக்கள் மூடவழக்கம் மடிவதெந் நாளோ?
எங்கள் மடமைத்தனம் தொலையும்நாள் எந்நாளோ?
எல்லா மக்களு மொன்றென் றெண்ணும் நாள் வருமோ?
10.1.1937 - தீண்டாமை ஒழிக - தி.வே..
மலமுண்ணும் நாயும் பன்றியும் கோழியும்
வாசல் வீடுபுகச் சம்மதிப்பீர்
உலக மக்களிற் சிலரைப் புறத்தினில்
ஒதுக்குதல் எம்முறையோ உரைப்பீர்?
25.7.1937 - தீடக்கும்மி . ஜெகந்நாதன்
பறையன் சக்கிலி பாணர் முதலோரைப்
பார்ப்பனர் தீண்டிடில் தோஷ மென்றார்
பறையன் தந்த கோரோசனையே உங்கள்
பாலர் பிணிகளைத் தீர்த்திடுமே.
அன்றாடம் கூட்டங்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை எதிர்த்துச் சாடியதோடு, தாம் நடத்தி வந்த ஏடுகளில் எழுதியவைகளையும், எழுதுவதற்குத் துணை நின்றதையும் காண்பீராக!
17.5.1931 -குடிஅரசு - ஏழாவது ஆண்டும், தீண்டாமையும் - கைவல்யம்.
17.5.1931 - குடிஅரசு - தீண்டப்படாதார் நிலைமை - திருச்சி .சி. அபிமன்னன்.
28.6.1931 - குடிஅரசு - ஆதி திராவிடர்களே யோசித்துப் பாருங்கள். புத்திமான் பலவான் - கைவல்யம்
9.1.1938 - தாழ்த்தப்பட்டவர்களும் முஸ்லிம்களும்
19.11.1939 - தீண்டப்படாதவர்களே, கண் விழியுங்கள்!
13.12.1939 - தீண்டாமையும் ராசிபுரம் மகாநாடும் - கைவல்யம்
30.9.1944 - பெரியார் அம்பேத்கர் சந்திப்பு
6.1.1945 - தாழ்த்தப்பட்டோர் முன்னேற
4.8.1945 - தீண்டாமை ஒழிய 2000 பேர்
22.2.1946 - அம்பேத்கர் அழைப்பு
24.8.1946 - தீண்டாமை சாபக்கேடா? உயிரா?
21.2.1946 - தாழ்த்தப்பட்டோரும் தப்பட்டை வாசிப்பும்
2.10.1948 - தீண்டாமைத் தீ
11.6.1949 - தாழ்த்தப்பட்டோர் விடுதலையும் அரசியல் உரிமையும்
தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேறக்கூடாது என்பதற்குப் பார்ப்பனக் கும்பல் எழுப்பிய தடுப்புச் சுவர்களையும் இனிக் காட்டுகிறோம்.

சுசீந்திரம் மார்கழி விழா 4.1.1931ஆம் தேதியோடு முடிவடைந்தது. தேவஸ்தான உதவி கமிஷனர் நீலகண்ட அய்யர் இருந்தபோது, சுசீந்திரம் தெருக்களில் எல்லோரும் நடமாடுவது சட்ட விரோதமல்ல என்ற அய்க்கோர்ட் முடிவிற்குப் பின்னரும் சில பார்ப்பன உத்தியோகஸ்தர்கள் முக்கியமாகப் போலீசு உத்தியோகஸ்தர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் இருக்கும் கிராமங்களிற் சென்று பயமுறுத்தினார்கள் - குடிஅரசு 18.1.1931
 
சென்னையில் நடைபெற்ற தாழ்த்தப்பட்டவர்களின் கூட்டம் ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சி வருமாறு:

முதல் நாள் பீச்சு மீட்டிங் நடந்து கொண்டிருக்கும்போது சில அய்யங்கார் பார்ப்பன மாணாக்கர்கள் வம்பில் பிரவேசித்து திரு.பொன்னம்பலனார் பேசிக் கொண்டிருக்கும்போது காந்திக்கு ஜே! வந்தே மாதரம்! அம்பேத்கருக்கு ஷேம் என்று சத்தம் போட்டு கூட்டத்தைக் கலைக்க சூழ்ச்சி செய்தார்களாம். (குடி அரசு 25.10.1931)
பார்ப்பனர்கள் பரப்பி விட்ட விஷத்தைப் பற்றி விவேகானந்தரும், ரமேஷ் சந்திரதத்தும் கூறியவைகள்: பிராமணர்களே! நீங்கள் நாடெல்லாம் விஷத்தைப் பரப்பி விட்டீர்கள். நீங்களே அந்த விஷத்தை எடுத்துவிடுங்கள். எப்போதும் நல்ல நிலைக்கு வரமுடியாத புரோகிதக் கூட்டத்தை வெறுத்துத் தள்ளுங்கள் - விவேகானந்தர்

பிராமணர்களே, உங்களை எல்லா ஜாதிக்காரர்களும் பகைக்கின்ற உங்களுடைய எண்ணங்களை, ஏற்பாடுகளை விட்டு விட்டு எல்லா சமூகத்திற்கும் நன்மை செய்யுங்கள். ஒற்றுமை ஏற்படுத்தி வாழ விரும்பாத வரையில் அழிந்து போய் விடுவீர்கள் என்று மைலாப்பூரில் ரமேஷ் சந்திரதத்தர் பேசினார். (குடி அரசு 10.3.1946)

இப்படி பார்ப்பனர்களின் இடைவிடாத தொல்லைகளையும் சூழ்ச்சிகளையும் வென்று காட்டிய தந்தை பெரியார் அவர்கள் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் சொற்பொழிவுகள், மேற்கொண்ட பணிகள் அனைத்தையும் தமிழகத்திற்கு வழங்கியும் வந்திருக்கிறார்.

பெரியார் அவர்கள் முன்னின்று நடத்திய மாநாட்டுத் தீர்மானங்களில் சிலவற்றை இங்கே குறிப்பிடுகின்றோம்.

செங்கல்பட்டு சுயமரியாதை மாகாண மாநாடு - 1929 தீர்மானம் - 7 :  

மனித நாகரிகத்திற்கும், தேச முன்னேற்றத்திற்கும் தடையான தீண்டாமை என்பதை ஒழித்து எல்லா ரஸ்தாக்கள், குளங்கள், கிணறுகள், பாடசாலைகள், சத்திரங்கள், தண்ணீர்ப் பந்தல்கள் முதலிய பொது ஸ்தாபனங்களைத் தட்டுத் தடங்கலின்றி அனுபவிக்க சகல ஜனங்களுக்கும் சமஉரிமை கொடுக்கவேண்டும் என்று தீர்மானிக்கிறது.
தீர்மானம் - 21: தீண்டாதார் எனப்படுவோருக்கு சர்க்காரில் காலி யாகும் உத்தியோகங்களில் முதல் உரிமை கொடுக்க வேண்டும் என்று தீர்மானிக்கிறது.

ஈரோடு இரண்டாவது சுயமரியாதை மாநாடு 10.5.1930இல் நடைபெற்ற போது வடித்தெடுக்கப்பட்ட தீர்மானம்:

தீர்மானம் - : தீண்டாமை என்னும் கொடுமை மனித தர்மத்திற்கு விரோதமென்று இம்மாநாடு கருதுவதுடன் ஜன சமூகத்தில் எந்த வகுப்பாருக்கும் பொது உரிமைகளை மறுக்கும் பழக்க வழக்கங்களை உடனே ஒழிக்க வேண்டுமென்றும், பொது ரஸ்தாக்கள், குளங்கள், கிணறுகள், தண்ணீர்ப் பந்தல்கள், கோயில்கள், சத்திரங்கள் முதலிய இடங்களில் சகல ருக்கும் சம உரிமை வழங்க வேண்டுமென்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது.

1931-இல் விருதுநகர் மாநாடு இயற்றிய தீர்மானம்:

தீர்மானம் - : தீண்டாமை என்பது இந்து சமூகத்திலுள்ள சகல ஜாதிகளையும் பிடித்த நோயென்றும் தீண்டாமை ஒழியவேண்டுமானால் பிராமணீயம் ஒழிய வேண்டுமென்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது.

4.8.1940-இல் திருவாரூரில் நடைபெற்ற மாநாட்டின் தீர்மானம்:

தீர்மானம் - 6: ஆதிதிராவிடர் சமுதாயத்திற்கு சர்க்காரால் அளிக்கப் பட்ட தனித்தொகுதி காப்பு முறை பூனா ஒப்பந்தத்தால் அழிக்கப்பட்டு, அச்சமுதாயத்திற்குச் சரியான பிரதிநிதி வரமுடியாமல் செய்யப்பட்டு விட்டதால் இனிவரும் தேர்தல்கள், யாவற்றிற்கும் தனித்தொகுதி முறையையே ஏற்படுத்த வேண்டுமென்று சர்க்காரைக் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் - 9:  திராவிட நாட்டு ஆதிதிராவிடர்களை அரிஜனங்கள் என்ற பெயரால் அழைக்கப்படுவதை மாற்றி ஆதிதிராவிடர்கள் என்ற பெயராலேயே அழைக்கப்பட வேண்டுமென்று சர்க்காரையும் பொது ஜனங்களையும் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் - 10:  தற்போது உள்ள வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ எண்ணிக்கை திராவிடர்களுக்கும், ஆதிதிராவிடர்களுக்கும் மிகக் குறைவாக இருப்பதால் ஜனசங்கைக்கு ஏற்றபடி அவ்விகிதங்கள் ஏற்படுத்தப்பட வேண்டுமென்றும், அவ்விகிதப்படி உத்தியோகங்கள் அடையும் வரை அதிகமாகப் பிரதிநிதித்துவம் அடைந்திருக்கும் கூட்டத்தாருடைய நியமனம் நிறுத்திவைக்கப்பட வேண்டுமென்றும் சர்க்காரைக் கேட்டுக்கொள்ளுகிறது.

சேலத்தில் 27.8.1944இல் நடைபெற்ற மாநாட்டில் உருவாக்கிய தீர்மானம்:

தீர்மானம் - (): மக்கள் பிறவியினால் ஜாதிபேதம் கற்பிக்கப்பட்டு இருப்பதையும், அவற்றுள் உயர்வு - தாழ்வு கற்பிக்கப்பட்டிருப்பதையும், இக்கழகம் மறுப்பதோடு அவைகளை ஆதரிக்கிற, போதிக்கிற, கொண்டிருக்கிற மதம், சாஸ்திரம், ஸ்மிருதி, புராணம், காவியம் என்பவை முதலாகிய எவைகளையும் பொதுமக்களும் குறிப்பாக நமது கழகத்தவர்களும் பின்பற்றக் கூடாதென்றும் தீர்மானிக்கிறது.

29.9.1945 திருச்சியில் நடைபெற்ற மாநாட்டுத் தீர்மானம் வருமாறு:

தீர்மானம் - 2:  திராவிட நாட்டிலுள்ள மக்கள் யாவரும் ஜாதி, வகுப்பு அவை சம்பந்தமான உயர்வு, தாழ்வு இல்லாமல் சமுதாயத்திலும் சட்டத்திலும் சமஉரிமையும் சமசந்தர்ப்பமும் பெற்று சமவாழ்வு வாழச் செய்ய வேண்டும்.

மேற்கண்டவைகள் அனைத்தும் தந்தை பெரியார் அவர்கள் காலத்தில் நடைபெற்றவைகள்தானே! அதற்குப் பிறகு திராவிடர் கழகத்தின் பணி தாழ்த்தப்பட்ட சகோதரர்களின், சகோதரிகளின் உரிமைக்காக, உயர்வுக்காக எவ்வாறு நடைபெறுகிறது என்பதையும் காண்போமாக!

(நூல் - தந்தை பெரியாரும்  தாழ்த்தப்பட்டோரும்! ஆசிரியர் தஞ்சை ஆடலரசன்)

Comments

Popular posts from this blog

தந்தை பெரியாரும், தாழ்த்தப்பட்டோரும் - 1

தந்தை பெரியாரும் தாழ்த்தப்பட்டோரும் - 9

ஜாதியை உருவாக்கியவர்கள் ஆரியர்களா? வடுகர்களா?