தந்தை பெரியாரும் தாழ்த்தப்பட்டோரும் - 7
தாழ்த்தப்பட்டோருக்கு துரோகம்!
ஒன்றா இரண்டா! ஓராயிரம் அறிக்கையில் இதோ மேலும் ஒன்று. தாழ்த்தப்பட்ட சமூகச் சகோதரர்களுக்கு இவ்வளவு கொடுமையா? சென்னையில் உள்ள தென் மண்டல உணவுக் கார்ப்பரேஷனில் பணிபுரியும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஊழியர்களான சகோதரர்கள் இடஒதுக்கீட்டில் மத்திய அரசு ஆணையும் அரசியலில் சட்டமும் வழங்கியுள்ள உரிமைகளுக்காக அறவழிப் போராட்டத்தினை மேற்கொண்டனர். 16.3.1985 அன்று நடைபெற்றது இந்த அறப்போர்.
இதற்கு என்ன காரணம் என்றால் தென்மண்டல அலுவலகத்தில் நான்காம் பிரிவு ஊழியரிலிருந்து மூன்றாம் பிரிவு ஊழியருக்கு பதவி உயர்வு பெறுகிறவர்களது பட்டியலை மண்டல மேலாளர் வெளியிட்டபோது தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களது உரிமைகளைப் பற்றி கவலைப்படாமல் அவர்கட்கு எவ்வித
பிரதிநிதித் துவமும் அதில் தராமல் ஆணை பிறப்பிக்கப்பட்டதாம் 8.3.1985 அன்று. ஏற்கெனவே சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்புப்படி நியமனங்களில் மட்டும்தானாம். 43 தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த அதிகாரிகளை உடனே போலீசுக்குத் தகவல் கொடுத்து அவர்களைக் கைது செய்து மாஜிஸ்டிரேட் முன்னிலையில் கொண்டு நிறுத்தி 15 நாள் காவலில் வைக்க ஆணையிட்டு சிறையில் அடைத்துள்ளனர்.
அத்தியாவசிய சர்வீஸ் சட்டத்தினை அக்ரமமாகத் தமிழக அரசு இதற்குப் பயன்படுத்தியுள்ளது. படிக்காத தாழ்த்தப்பட்ட சகோதரர் களுக்கும், சகோதரிகளுக்கும் சமுதாயம் இழைக்கும் கொடுமைகள் ஒருபுறம் என்றால் - ஓரளவு படித்து எப்படியோ வாழ்க்கை நடத்திட பதவி தேடும் தாழ்த்தப்பட்ட சமுதாய ஊழியர்கள் மீதும் இப்படியா வன்நெஞ்சத்துடன் நடந்து கொள்வது? - தமிழர் தளபதி அறிக்கை விடுதலை 21.3.1985
கல்பாக்கம் நகரியத்தில் டாக்டர் அம்பேத்கர் விழாவில் பேசிய பொதுச் செயலாளர் மானமிகு கி. வீரமணி அவர்கள் குறிப்பிட்டதாவது: டாக்டர் அம்பேத்கர் குறிப்பிட்ட இனத்துக்கு மட்டுமே உரியவரல்லர். டாக்டர் அம்பேத்கர் அவர்களும் தந்தை பெரியார் அவர்களும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகும் என்றார்.
- விடுதலை, 27.4.1985
பெங்களூர் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் பொதுச் செயலாளர் குறிப்பிட்டதாவது:
காலம் காலமாக நமது ரத்தத்தைக் குடித்த அட்டைகள் மீண்டும் நம்மிடம் ரத்தம் கேட்கின்றன. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைப் போரைத் துவக்குவோம்.
வைக்கம் போராட்டம் டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர் அவர்களுடைய கவனத்தை ஈர்த்தது. தாழ்த்தப்பட்டோர் உரிமை காக்கப்பட்டது. உடனே அம்பேத்கர் அவர்களும் மராட்டியத்திலே போர்க்களம் அமைத்தார்.
தனித் தொகுதி முறையை எதிர்த்து காந்தியார் உண்ணாவிரதம் இருந்தபோது அந்த மிரட்டலுக்குப் பணிந்து விடக் கூடாது என்று தந்தை பெரியார் அம்பேத்கருக்குத் தந்தி கொடுத்தார். ஒரு காந்தியின் உயிரைவிட கோடானு கோடி ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைதான் முக்கியம் என்று தந்தை பெரியார் அந்தத் தந்தியில் குறிப்பிட்டிருந்தார்.
தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்று சொன்னால் சட்டத்தின் மூலமாக ஒழித்துவிட முடியாது. சட்டத்திலே ஒழிந்துவிட்டது என்று வேண்டுமானால் சொல்லலாம். தீண்டாமையை எப்பொழுது ஒழிக்க முடியும் என்று சொன்னால் வர்ணாஸ்ரம தர்மப்படியுள்ள இந்து மதத்தை எப்பொழுது ஒழிக்கின்றோமோ அப்பொழுதுதான் தீண்டாமையை ஒழிக்க முடியும் - விடுதலை 21.4.1985
சமூக நீதியின் சரித்திரத்தை மாற்ற நினைத்தால் அந்த வரிகள் ரத்தத்தால் அழிக்கப்படும். பார்ப்பன ஆதிக்க சக்திகளுக்குப் பொதுச் செயலாளர் விடும் கடும் எச்சரிக்கை
13.4.1985 அன்று நடந்த இடஒதுக்கீடு பாதுகாப்பு மாநாட்டில் பொதுச் செயலாளர்:
பேராசிரியர் ராகுலசாங்கிருத்தியாயன் பற்றிக் கேள்விப்பட்டிருப் பீர்கள். பொது உடைமைக் கொள்கையில் மிகவும் ஈர்க்கப்பட்டவர். பல நாடுகளைச்
சுற்றிப் பல மொழிகளைக் கற்று மிகப் பெரிய சிந்தனையாளராக சமூகவியல் அறிஞராகி பல நூல்களை எழுதியிருக்கக் கூடியவர். அவர் ராமராஜ்யமும் மார்க்சியமும் என்ற ஒரு நூலை எழுதி இருக்கிறார்.
கரபாத்திரி அவர்கள் (காசியிலே உள்ள சங்கராச்சாரி போன்றவர்) பெரும்பான்மையோரின் சினத்தை அறிய மாட்டார். அவர் அதை அறிந்து கொள்ள வேண்டுமானால் தமிழ்நாட்டிற்குச் சென்று வர வேண்டும் என்று மிகத் தெளிவாக எழுதுகிறார்.
வால்காவிலிருந்து கங்கை வரை என்ற நூலை எழுதிய ராகுல சாங்கிருத்தியாயன் இதைச் சொல்லுகிறார். அங்கேயும் (தமிழ்நாட்டிலும்) ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மூன்று சதவிகிதத்தினரேயான பிராமணர்கள் சனாதன மதத்தின் பேரால் 97 சதவிகிதம் மக்களை சூத்திரர்கள் என்றும், தாழ்த்தப்பட்டோர் என்றும் கூறி அவர்களுக்கு நரக வாழ்க்கை அளித்துவிட்டு, தாம் மட்டும் சொர்க்கத்தை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள்.
இப்போது பெரும்பான்மை மக்கள் அந்த நியாயத்தைப் புரிந்து கொண்டு விட்டனர். பிராமணர்களை வெறுக்கத் தொடங்கி விட்டனர் என்று மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.
- விடுதலை 18.4.1985
திராவிடர் கழகத்தின் மாநாடு 13.4.1985 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்றபோது தாழ்த்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை உயர்த்த வேண்டுமென்றும், உயர்நீதிமன்ற நீதிபதி நியமனத்தில் தாழ்த்தப்பட் டோருக்கு முன்னுரிமை தர வேண்டும் என்றும், நுழைவுத் தேர்வைக் கைவிட வேண்டுமென்றும், 90 சதவிகித வருகைப் பதிவு ஆணையும் ஒழிய வகை செய்ய வேண்டுமென்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பெற்றன.
தீர்மானம் எண்: 6 - தமிழக அரசு தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தற்போது 18 சதவிகிதம் இடஒதுக்கீடு செய்து வருகிறது. தாழ்த்தப்பட்ட மக்களின் மக்கள் தொகை விகிதாசாரத்திற்கு ஒப்பிடும்போது இது குறைவான ஒதுக்கீடாகும். தாழ்த்தப்பட்ட மக்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப அவர்களுக்கு நடைமுறையில் இருந்துவரும் இடஒதுக்கீட்டு விகிதத்தை உயர்த்துமாறு தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
இந்துஸ்தான் டெலிபிரிண்டர்சின் பார்ப்பன ஆதிக்கத்தைக்கூட விடுதலை 4.4.1985 அன்று எழுதிக் காட்டி நியாயம் கேட்டது.
இடஒதுக்கீட்டு முறைக்கு ஆபத்து வந்துவிட்டது என்ற நிலை தெரிந்த உடன் தமிழர் தளபதி எச்சரிக்கை என்று அறிக்கை வெளியிட்டார் 31.7.1985 விடுதலை ஏட்டில்.
தாழ்த்தப்பட்டவர்களே, பிற்படுத்தப்பட்டவர்களே, ஆயத்தமாவீர்!
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு உள்ள இடஒதுக்கீட்டை ஒழித்துக் கட்ட அனைத்துக் கட்சிப் பார்ப்பனர்களும் ஒன்று திரண்டு நிற்கின்றனர்.
மத்திய ஆட்சி பார்ப்பன ஆட்சி என்பதாலும், பணபலம், பத்திரிகை பலம், (பார்ப்பன) இன பலம் எல்லாமே இருக்கிறது என்பதாலும், துரோகிகளும், பதவி வேட்டை விபீடணர்களும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் ஓராயிரம் கோடி உள்ளனர் என்பதாலும் ஒரு கை பார்த்துவிடுவது என்று வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றனர்.
100-க்கு 90 விழுக்காடு உள்ள இனத்தவர்களாகிய தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இனத்தவர்கள் நெல்லிக்காய் மூட்டை அவிழ்த்துக் கொட்டியது போலக் காட்சியளிப்பதால் தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும், காமராசரும், வடபுலத்தில் டாக்டர் அம்பேத்கரும் போராடிப் பெற்றுத் தந்த வகுப்புரிமையை சமூகநீதி ஊன்றுகோல்களைப் பறித்திட மிகத் தீவிரமாகத் திட்டமிட்டுப் பணியாற்றுகின்றனர்.
பொருளாதார அடிப்படை என்றால், பார்ப்பானும், அவனை நடத்தித் திரியும் சில முன்னேறிய ஜாதியினரும் இடஒதுக்கீட்டை கபளீகரம் (அபகரித்து) செய்யலாம். இந்தச் சூழ்ச்சியை தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொண்டு தெளிவாகச் செயலாற்ற வேண்டும். எச்சரிக்கை 31.7.1985
- தளபதி அறிக்கை விடுதலை 23.5.1985
மேலும் ஓர் அறிக்கையைப் படியுங்கள். தமிழகத்தையும் குஜராத் ஆக்க சூளுரை நடத்தப் போகிறார்கள். சட்ட விரோதக் கிளர்ச்சியை அரசு அனுமதிக்கப் போகிறதா?
ஜதக்குரு லோககுரு சங்கராச்சாரிகளை, ஜாதி அடிப்படை பார்க்காது தகுதி அடிப்படை பார்த்து எந்தச் ஜாதியிலிருந்தும் எடுத்து நியமனம் செய்ய வேண்டும் என்று கூறத் தயாரா?
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 50 விழுக்காடு, தாழ்த்தப்பட்டவர்களுக்கு 18 விழுக்காடு என்றவுடன் ஏன் வயிறு எரிகிறீர்கள்? 68 விழுக்காடு என்றவுடன் ஏன் வயிறு எரிகிறீர்கள்? 68 சதவிகித மக்கள் தொகைக்கு 50 சதவிகிதம்; 24 சதவிகித மக்களுக்கு 18 சதவிகிதம் இங்கே! இதில் அநீதி யாருக்கு இழைக்கப்பட்டிருக்கிறது? தயாராகுங்கள், ஜூலை 13-14.
- விடுதலை 20.6.1985
எத்தனையோ தலையங்கங்கள் அதில் இதோ ஒன்று:
தீண்டாமை தடுப்புச் சட்டம் தூங்குகிறதா?
கரூர் தோட்டக் குறிச்சியில் நடந்த ஜாதிக் கலவரம்பற்றி நமது சிறப்புச் செய்தியாளர் குழு நேரில் சென்று சேகரித்த தகவல்கள் கடந்த இருநாள்களாக விடுதலையில் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டுக் கிராமங்களில் வர்ணாஸ்ரம தர்மத்தால் உருவான ஜாதிப்பிடிப்பு இன்னும் தளராமல் இறுகிப் போய்க் கிடக்கிறது என்பதற்கு இத்தகைய நிகழ்ச்சிகளே சரியான சான்றாக அமைந்திருக்கின்றன.
இன்னும் பல கிராமங்களில் ஜாதிக்கொரு சுடுகாடு இருக்கிறது. தாழ்த்தப்பட்டோருக்கு டீக்கடைகளில் தனிக்குவளை வைத்திருக்கிறார்கள். செத்த மாட்டைத் தூக்குவதற்கு தாழ்த்தப்பட்டவர்கள்தாம் வர வேண்டும். தப்பு அடிக்கும் தொழிலும் அவர்களே செய்ய வேண்டும்.
எனவே, கிராமங்களில் நமது கவனம் திரும்ப வேண்டும். அதன் மூலம் ஜாதியின் பெயரால் நிலை நிறுத்தப்பட்டுள்ள இழிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இது மிகவும் அவசரமான - அவசியமான கடமை என்று நாம் கருதுகிறோம்.
- தலையங்கம் விடுதலை 17.5.1985
பார்ப்பனர்கள் அவ்வப்போது சூழ்ச்சி செய்ய அதனை உடனுக்குடன் முறியடிக்கும் முயற்சியைப் பாருங்கள்!
தாழ்த்தப்பட்டோருக்கு அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளைப் பறிக்க அமைதியாய், பார்ப்பனர்கள், விபீடணர்கள் உண்ணாவிரத மிரட்டலுக்குக் கழகம் பதிலடி ஜூலை 3-ஆம் நாள் உண்ணும் நாள் கிளர்ச்சி சென்னை அண்ணாசாலை அஞ்சலகம் முன் பொதுச் செயலாளர் தலைமையில் நடைபெறும்.
விடுதலை 20.6.1985
இப்படி எத்தனையோ செயல்களுக்குக் காரணமாக இருக்கின்ற தமிழர் தளபதியின் இடஒதுக்கீட்டு கொள்கையின் உறுதியைக் காட்ட இதோ ஒரு சான்று:
பொருளாதார வரம்பு மீண்டும் நுழையக் கூடாது. தாழ்த்தப்பட்டோர் ஒதுக்கீடும் பறி போகிறது.
அரசுக்கு கழகப் பொதுச் செயலாளர் சுட்டிக் காட்டுகிற அவசர முடிவினை எடுக்க ஆகஸ்டு 11ஆம் தேதி லால்குடியில் மாநாடு.
விடுதலை 25.7.1985
இப்படி அய்யாவிற்குப் பிறகு ஆயிரமாயிரம் சாதனைகளைச் செய்து முடிக்கிற காரணத்தால்தான் பம்பாய் உயர்நீதிமன்ற நீதிபதி எச்.எச்.
காந்தாரியா பம்பாயில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழாவில் முழங்கியபோது கூறுகிறார்:
பெரியார், அம்பேத்கர் இல்லாவிட்டால் நான் உங்கள் முன் நீதிபதியாக நிற்க முடியாது. இடஒதுக்கீட்டை எதிர்ப்போர் சமுதாயத்தின் எதிரிகளே! வீரமணி அவர்களுடைய நுண்ணிய அறிவு என்னைப் பெரிதும் கவர்ந்தது. இன்று தந்தை பெரியாரின் சிந்தனைகளை பாமர மக்களுக்குத் தொடர்ந்து செலுத்தி வருகிறார்.
நானும் அவரோடு கலந்துகொண்டு தமிழகத்தின் பகுதிகளைக் காண ஆசைப்படுகிறேன் - விடுதலை 27.9.1984
இது உள்நாட்டிலே - வடபுலத்திலே அய்யாவின் தொண்டு - அவர்தம் அணுக்கத் தொண்டர் தமிழர் தளபதியின் தொண்டு பற்றி நிலவிய கருத்தாகும்.
இதோ வேறொன்று, கடல் கடந்து வாழ்கின்ற பெருமக்களும் எப்படி எடை போட்டுப் பார்க்கின்றனர் என்பதற்குச் சான்று.
திராவிடர் கழகம் - தமிழர் தளபதிபற்றி நியூயார்க் டைம்ஸ் ஏடு சிறப்புக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் தமிழாக்கம் விடுதலையில் 19.1.1983 வெளிவந்தது.
தாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்று பார்ப்பனர்கள் உரிமை கொண்டாடக் கூடாது; சமூகத்தில் அவர்கள் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கக் கூடாது என்றும் வீரமணி கூறுகிறார். திராவிடர் கழகம் ஒரு பார்ப்பன எதிர்ப்பு இயக்கமாகும்.
ஆம்!
இது ஒரு பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு இயக்கம்தான்; ஏனென்றால் ஆபு டூபே எழுதிய இந்துமதப் பழக்க வழக்கக் கொடுமைகளை உணர்ந்து கொண்டிருக்கிறது. இதனை சிங்கப்பூர் தமிழ் முரசு இதழ் 11.1.1981 அன்று எழுதிக்காட்டியது. 1980-ஆம் ஆண்டின் பெரிய லாபம் திராவிடர் கழகத்துக்கே! குறிப்பாக பழம் பெருமையுடைய திராவிடர் கழகத்தின் இளந்தலைவர் வீரமணிக்கே!
இதன்மூலம் தமிழகப் பொதுவாழ்வில் வீரமணி புதியதொரு தாரகையாகப் புத்தொளியுடன் பிரகாசிக்கத் துவங்கியுள்ளார். ஆக 1980 வீரமணியின் ஆண்டு. தமிழினத்தின் நலனுக்கு ஒரு புதிய காவலர் கிடைத்த ஆண்டு.
திராவிடர் கழகத்தின் சமயக் கொள்கைகளை ஏற்காத படித்த சமூகத்தினர்கூட இப்பொழுது வீரமணியை பொதுத் தலைவராக தமிழின உரிமைக் காவலராகக் கருத ஆரம்பித்து விட்டனர்
சிங்கப்பூர் தமிழ்முரசு 11.1.1981
இப்படிப் பலர் பலப்படப் பாராட்டுவதற்குக் காரணம் தந்தை பெரியார் அவர்கள் எதைச் சொன்னார்களோ அதைச் செய்து காட்டினார்கள். அதைப் போலவே தந்தை பெரியாரின் உண்மையான வாரிசாக விளங்குகிற தமிழர் தளபதி - திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் மானமிகு வீரமணி அவர்கள் அய்யா கண்டெடுத்த மணிகளிலெல்லாம் மாமணியாய்த் திகழ்கின்ற வீரமணியாவார். இதை முடிக்கிறபோது மானமும் அறிவுமுள்ள தமிழர்களே! தந்தை பெரியார் ஆற்றிய தொண்டை, அவர் தம் மறைவிற்குப் பிறகும் தொடர்ந்து தொய்வில்லாமல் அய்யாவின் நெறிமுறைகளில் பிறழாமல் கொள்கை முரசம் கொட்டுகிறார் என்பதை மானமிகு வீரமணி அவர்களின் ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும் காண்பீராக!
(நூல் - தந்தை பெரியாரும்
தாழ்த்தப்பட்டோரும்! ஆசிரியர் தஞ்சை ஆடலரசன்)
Comments
Post a Comment