தந்தை பெரியாரும், தாழ்த்தப்பட்டோரும் - 1



தாழ்த்தப்பட்டோர் மீது தடைகள் - கொடுமைகள்!


அறிவும், மானமும் ஊட்டி, தமிழ்ச் சமுதாயத்தை அனைத்துலக சமுதாயத்தோடு ஒப்ப, வாழ வைப்பதற்கு அரும்பணியாற்றிய தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய பணிகளையெல்லாம், தொகுத்தும் வகுத்தும் கூறுவது எம் போன்றோர்க்கு எளிதன்று என்றாலும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு ஆற்றிய பணிகளை ஓரளவிற்குத் தொகுத்து எழுதுவது இன்றைய சமுதாயத்திற்குத் தேவைப்படுகிறது.
யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற பழந்தமிழ் பாடல் வரிக்கு இலக்கியமாய் வாழ்ந்து காட்டிய பெரியார், தமிழ் கூறும் நல்லுலகம் முதலில் அறிவும் மானமும் பெற, அயராது உழைத்த உலகு போற்றும் தலைவராவார். புத்த நெறிகளை எத்தர்கள் பித்தலாட்டம் செய்தபோது, புத்துலகு காணத்துடித்த புத்துலகச் சிற்பி தந்தை பெரியார் அவர்கள்.
தந்தை பெரியார், திராவிடர் கழகம் - ஆகிய சொற்கள் அறிவார்ந்த மக்கள் உச்சிமீது வைத்துப் புகழப்படும் சொற்களாகும். மல்லிகை மலர்கள்தான் என்றாலும் தெருக்களில் கூவிக்கூவி விற்பதைப்போல, தந்தை பெரியார் கண்ட கொள்கைகள் மிகச் சிறப்புடையவைகள் என்றாலும், அவரும் அவருடைய வழித்தோன்றல்களும் சிற்றூர், பேரூர், முச்சந்தி, நாற்சந்தி, பட்டினம், பட்டிக்காடு என சுற்றிச் சுழன்று கொள்கை விளக்கம் அளித்தார்கள். இதனால் விளைந்த பயன் எண்ணிலடங்காது! எடுத்துரைக்க முடியாது.

என்றாலும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்து நம்மீது குதிரை சவாரி செய்துவர விரும்புகிற பார்ப்பனர்கள் பிற்படுத்தப்பட்டவர் களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்குமிடையே உள்ள இடைவெளியை மேலும் விரிவுபடுத்துவதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கிற காரணத்தால் இவைகளை எடுத்துக்காட்டி உண்மையான எதிரி யார்- என்பதை தெளிவுபடுத்துவதே நோக்கமாகும். ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பதை உணர்ந்த, பிரித்தாளும் கலையில் கைதேர்ந்த பார்ப்பனர்கள் பிற்படுத்தப்பட்டவர்களையும், தாழ்த்தப்பட்டவர் களையும் ஓரணியில் திரட்டும் திராவிடர் கழகத்தின்மீது அவதூறுகளைத் திரைமறைவில் அவிழ்த்துவிட்டு வருகின்றனர். பார்ப்பனர்களின் மாய வலையில் வீழ்ந்து சிக்கிய ஒரு சில தாழ்த்தப்பட்ட தோழர்கள் பிற்படுத்தப் பட்டவர்களுக்கு மட்டுமே திராவிடர் கழகம் பாடுபடுவதாக நினைக்கத் தொடங்கி விட்டனர். அதன் காரணமாகத் தாழ்த்தப்பட்டவர்களுக்குத் திராவிடர் கழகம் என்ன செய்துவிட்டது என்று கேட்குமளவு வந்துவிட்டனர்.

தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும் ஒன்று சேர்ந்து இழிவினை எதிர்த்துப் போராடுவதற்குப் பதில், தங்களுக்குள்ளேயே தாக்குதல் நடத்துவது கொடுமை அல்லவா! ஏற்றத்தாழ்வுகளை அடித்து நொறுக்கி சமத்துவ சமுதாயம் அமைத்திடப் போராடிவரும் திராவிடர் கழகத்தின் மீது நம்மவர்களே அவதூறுகளை அள்ளிவீசுவது கொடுமையிலும் கொடுமை!

எனவே, தந்தை பெரியார் அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்காக உழைக்கத் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட நாள்களில் தமிழ்நாடு இருந்த நிலையையும் முதலில் காணவேண்டும்.

1.                    1.ஆதிதிராவிடர்கள் பார்ப்பனத் தெருக்கள், முன்னேறியவர்கள் வாழும் தெருக்கள், கோயில்களைச் சுற்றியுள்ள தெருக்கள் ஆகிய எதிலும் நடந்துகூடச் செல்ல முடியாது.

2.            ஆதி திராவிடர்கள் முழங்காலுக்குக் கீழ் வேட்டி கட்டக்கூடாது.
3.            தங்க நகைகள் அணியக்கூடாது.
4.            மண் குடத்தில்தான் நீர் மொள்ள வேண்டும்.
5.            ஆதிதிராவிடர் வீட்டுக் குழந்தைகள் படிக்கக்கூடாது.
6.            அடிமையாக இருக்க வேண்டும்.
7.            சொந்த நிலம் வைத்திருக்கக் கூடாது.
8.            திருமணக் காலங்களில் மேளம் வாசிக்கக் கூடாது.
9.            பூமி குத்தகைக்கு வாங்கி சாகுபடி செய்யக்கூடாது.
10.          குதிரைமீது ஊர்வலம் செல்லக்கூடாது.
11.          வண்டி ஏறிச் செல்லக்கூடாது.
12.          பொதுக்கிணற்றில் நீர் எடுக்கக்கூடாது.
13.          சுடுகாட்டிற்குச் செல்லும் பாதையே வேறு.
14.          பறையன் சுடுகாடு என்றே தனி சுடுகாடு.
15.          மேல் அங்கியோ, துண்டு அணிந்துகொண்டோ செல்லக்கூடாது.
16.          16.பெண்கள் ரவிக்கைகள் அணியக்கூடாது என்பதோடு மேல் ஜாதியினர் வரும்போது மேலே அணிந்திருக்கும் வேறு துணியையும் எடுத்து அக்குலில் வைத்துக்கொள்ளவேண்டும்.
17.          17. நீதி மன்றங்களில் சாட்சி சொல்ல நேர்ந்தால் குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பால் நின்றுதான் சாட்சி சொல்ல வேண்டும்.

என்னும் நிகழ்ச்சிகளையெல்லாம் இன்றைக்குத் தமிழகத்தில் காண்பதரிது. இவைகளை ஒழித்துக் கட்டுவதற்குக் காரணமாக இருந்தவர் தந்தை பெரியார் அவர்கள்தான் என்பதையும், இவற்றை எதிர்த்து எழுதிய ஏடுகள் குடிஅரசு, புரட்சி, பகுத்தறிவு, விடுதலை போன்ற ஏடுகள்தாம் என்பதையும் எத்தனை பேர் நினைவில் வைத்திருக்கிறார்கள்.
 
தீண்டாமை ஒழிக என்று முழக்கமிட்டு நுனிப்புல் மேய்ந்த சீர்திருத்த வாதிகள் மலிந்த இந்தியாவில் தீண்டாமை எனும் நச்சுமரத்தை வேரோடு பிடுங்க ஜாதியை எதிர்த்துச் சமர்செய்த பெரியார் அவர்களைத் தலைவராகக் கொண்ட விடுதலை இயக்கத்தின் வரலாற்றினை நினைவு கூறுதல் சாலப் பொருத்தமேயாகும்.

உழைக்கும் வர்க்கமான தாழ்த்தப்பட்டோரின் உழைப்பைச் சுரண்டிய தோடு அவர்களைக் கேவலப்படுத்திய இழிசெயலை வெளியிட்டு சமுதாய நீதி கேட்க அன்றைய பத்திரிகை உலகில் குடி அரசை விட்டால் வேறு நாதியில்லை. நாயினும் கீழாகத் தாழ்த்தப்பட்டவர்களை நடத்தும் விதத்தில் பஞ்சமர்களும், நாய்களும், பெருநோய்க்காரர்களும் நுழையக் கூடாது என்று சென்னை நகர உணவு விடுதிகளிலும், பேருந்துகளிலும் விளம்பரப் பலகை வைக்கப்பட்டிருந்ததையும், பஞ்சமர்களுக்கு இடமில்லை என்று நாடக சபாக்கள் அறிவித்ததையும் குடி அரசு ஏடு மட்டும்தான் எதிர்த்து எழுதியது. (ஆதாரம் இணைப்பு - 1)

திருப்புராணம் ஆவிவூரைச் சேர்ந்த பெரிய கருப்பக் குடும்பன் என்ற தாழ்த்தப்பட்ட தோழன் குப்பை லாரி வண்டியை ஓட்டிக்கொண்டு வரும்போது உயர்ஜாதியினர் வசித்த தெருவில் வந்துவிட்டானாம். தங்களை அவமரியாதை செய்துவிட்டதாக எண்ணிய மேட்டுக்குடியினர், அந்தத் தாழ்த்தப்பட்டவனைத் தாக்கியதோடு மட்டுமன்றி, அவனது நிலத்திலிருந்த பயிரையும் நாசமாக்கினர். நீதி கேட்டு அதிகாரியிடம் புகார் செய்த அவனைக் கட்டி வைத்து அடித்ததோடும் அல்லாமல் மேல் ஜாதியினர், அவனுக்கு ரூபாய் 50 அபராதமும் விதித்தனர். இந்த அக்கிரமச் செயலைக் கண்டு கொதித்தெழுந்த நமது அய்யா அவர்கள் கொடுமை! கொடுமை!! என்ற தலைப்பில் செய்தியினை 24.11.1929 குடிஅரசு ஏட்டில் வெளியிட்டு நீதிவேண்டி குரல் எழுப்பினார்.

பல்லாவரம் கொளத்துமேட்டைச் சேர்ந்த அந்தோணிராஜ் என்ற மாணவன் படித்துவிட்டு வரும்போது அக்கிரகார வீதியில் நடந்து வந்து விட்டானாம். அதனால் வீதியின் புனிதம் கெட்டு தீட்டாகிவிட்டது என்ற ஆத்திரத்தோடு அவ்வீதியில் வசிக்கும் ரங்கசாமி அய்யர் என்பவர் அவனைச் செருப்பாலேயே அடித்தாராம். மதம் மாறியும் தொடர்ந்து வந்து இழிவு படுத்தும் பார்ப்பன அதர்மத்தை 24.4.1926 குடி அரசு ஏட்டின் மூலம் வெளியுலகிற்குக் காட்டினார்.

பத்திரிகை வாயிலாகப் பணி செய்ததோடு அய்யா அவர்கள் நின்று விடாது நமது இயக்கம் கூட்டிய ஒவ்வொரு மாநாட்டிலும் தாழ்த்தப்பட்டோர் நிலை உயர தீர்மானங்களை நிறைவேற்றி அரசுக்கு அனுப்பினார். 1929இல் செங்கற்பட்டில் கூடிய முதல் சுயமரியாதை மாநில மாநாட்டில் காலியாகும் உத்தியோகங்களை நிரப்பும்போது, தாழ்த்தப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டியும், தாழ்த்தப்பட்ட சிறுவர்களுக்குப் புத்தகம், உடை, உணவு முதலியவற்றை இலவசமாக அளித்து மற்ற வகுப்புச் சிறுவர்களைப்போல உயர்த்த வேண்டியும் தீர்மானம் இயற்றி அரசிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

1930 இல் ஈரோட்டில் நடைபெற்ற இரண்டாவது சுயமரியாதை மாநாட்டில் ஜாதிப்பெயரை அனைவரும் கைவிட வேண்டுமென்றும் கோயில் கிணறு, தண்ணீர்ப்பந்தல் போன்ற எல்லா இடங்களிலும் நுழைய அனைவருக்கும் சட்டத்தின் மூலம் உரிமை வழங்கவேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இவ்வுரிமை மறுக்கப்பட்டால் அதை எதிர்த்து அறப்போரில் குதிக்க அனைவரையும் தயார் செய்வது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 1931 இல் விருதுநகரில் கூடிய சுயமரியாதை வாலிபர் மாநாடு ஜாதி பேதத்தை நடைமுறைப்படுத்தும் ரயில்வே உணவு விடுதிகளுக்கும் நகராட்சி உணவு விடுதிகளுக்கும் லைசன்ஸ் வழங்கக்கூடாது என்ற புரட்சிகரமான தீர்மானத்தை நிறைவேற்றி அரசிற்கு அனுப்பியது. இதனை ஆதரித்து சட்டமன்ற உறுப்பினர்கள் போராட முன்வர வேண்டுமென கேட்டுக்கொண்டது மட்டுமல்லாது, திருச்சி மாவட்டம் பெரம்பலூரில் தாழ்த்தப்பட்டோர் பொது உரிமை வேண்டி போராட முன்வந்த போது இளைஞர்களை அந்த அறப்போரில் குதிக்க வேண்டியும் விருதுநகர் திட்டம் தீட்டியது.

31.5.1930 கள்ளிக்கோட்டை மாநாட்டில் தீயர் பெரியார் பேருரை:

ஒரு காலத்தில் தர்மம் என்று சொல்லப்படுவது மற்றொரு காலத்தில் முட்டாள்தனமாகத் தோன்றப் படுவதை நேரில் பார்க்கிறோம். உதாரணமாக மனிதன் கஷ்டப்பட்டு சம்பாதித்து, பணம் சேகரித்து அவற்றைப் பார்ப்பனர்களுக்கு அள்ளிக்கொடுத்து ஆசீர்வாதம் பெறுவது மனிதனுடைய கடமையான தர்மம் என்று கருதப்பட்டு வந்தது. ஆனால் அவை இன்றைய தினம் சுத்த மூடத்தனம் என்றும், ஏமாளித்தனம் என்றும் தோன்றிவிட்டது. அதுபோலவே ஏழைகளை ஏமாற்றிக் கொடுமைப்படுத்திச் சம்பாதித்த பணத்தைக்கொண்டு கோயில் கட்டுவது, மோட்சத்தில் இடம் சம்பாதித்துக் கொள்வதற்காகச் செய்யப்படும் தர்மம் என்று கருதப்பட்டு வந்தது. ஆனால் இப்போது முட்டாள்தனம் என்றும், தேசத்திற்குக் கெடுதியை விளைவிக்கக்கூடியதுமான துரோகமென்றும் தோன்றி அநேகர்களுக்கு பள்ளிக் கூடம், தொழிற்சாலை, வைத்தியசாலை முதலியவைகளுக்கு உபயோகப்படுத்த வேண்டியது முக்கியமான தர்மம் என்று தோன்றிவிட்டது என்று தன்னுடைய உரையில் தர்மத்திற்கு விளக்கமளித்தும் அடுத்து காலத்திற்கேற்றாற்போல் மாறுபடுவதையும் விளக்கி உரையாற்றி இருக்கிறார். - குடி அரசு 8.6.1930

அந்நாளில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைக் காட்டுகிறோம்: தாழ்ந்த வகுப்பினரும் தண்ணீருக்குக் கண்ணீரும்.

இது 18.9.1927 இல் குடி அரசு ஏட்டில் தலைப்பாக வந்த செய்தியாகும்.
இராமநாதபுரம் ஜில்லா திருப்பத்தூர் தாலுகா கட்டுக்குடிப்பட்டி என்னும் கிராமத்தில் தாழ்ந்த வகுப்பாரென்று உண்மை உணராப் போலி மக்களால் தள்ளப்பட்டிருக்கும் பள்ள நண்பர்கள் நாற்றமுள்ள தண்ணீரை விடுத்து நல்ல தண்ணீர் எடுத்துக் குடிப்பதற்கு ஊரிலுள்ள மற்ற வகுப்பினர்கள் வீதிவழிச் செல்லக்கூடாது என்று மிகவும் கொடுமையாகவும் முரட்டுத்தனமாகவும் தடை செய்தனர். அதுபற்றி தாழ்ந்த வகுப்பினர் சுமார் 30 வீட்டுக்காரர்கள் நமது அரசாங்க நீதிமன்றங்களுக்கு ஒரு மாதத்திற்கு முன் இருமுறை மனுக்கள் எழுதியிருந்தும் இந்நாள்வரை ஒருவித நன்மையும் கிடைக்கவில்லை.

மேலும் சான்றுக்கு ஒன்று:

மோட்டார் பஸ்களும் ஆதிதிராவிட கிறித்துவர்களும்: சமீபத்தில் ஜான்பால் உபாத்தியாயர் என்பவர் கோயம்புத்தூர் போவதற்காக காங்கேயத்தில் ஊத்துக்குளி போகும் சர்வீஸ் கார் நெ. 425 மோட்டாரில் டிக்கெட் வாங்கி உட்கார்ந்து கொண்டிருக்கும்போது மேற்படி காரில் டிக்கெட் கொடுத்துக் கொண்டு வருபவர் எவ்விதத்திலோ ஆதிதிராவிடன் என்று அறிந்து மேற்படி காரில் உட்கார்ந்து கொண்டிருந்த ஜாதி இந்துக்களின் உதவியைக் கொண்டு மேற்படி உபாத்தியாயரைப் பலவந்தமாக இறக்கிவிட்டு விட்டார்கள் (குடிஅரசு 19.12.1926)

மேற்கண்ட கொடுமைகளை எல்லாம் ஒழித்துக் கட்டுவதற்கு மாநாட்டில் பெரியார் அவர்களே ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார்.
தீர்மானம்: மனித வாழ்க்கையின் நன்மைகளை உத்தேசித்தும் ஜீவகாருண்யத்தை முன்னிட்டும், தேச முன்னேற்றத்தைப் பொறுத்தும் நம்நாட்டில் பெரும்பகுதியினர் மீது சுமத்தப்பட்டுள்ள தீண்டாமை என்னும் கொடிய தடையை உடனே விலக்க பொது ஜனங்களிடையே இடைவிடாது பிரச்சாரம் செய்து அவர்களைக் கண்விழிக்கச் செய்ய வேண்டும். (குடிஅரசு - 17.2.1929)

நீடாமங்கலத்தில் நடைபெற்ற கொடுமையானாலும், சுசீந்திரத்தில் நடைபெற்ற கொடுமையானாலும், வைக்கத்தில் நடைபெற்ற கொடுமையா னாலும், அவற்றையெல்லாம் மக்கள் மன்றத்திற்குக் கொண்டு வந்து நல்ல தீர்வு கண்டவர் தந்தை பெரியார் அவர்களே ஆவார்.

அம்பேத்கர் அவர்கள் 1924 மார்ச் மாதத்தில் தாழ்த்தப்பட்டவர்களின் முன்னேற்றத்திற்கு வழிகாண ஒரு சமூக சீர்திருத்த அமைப்பை உருவாக்கினார். அதை நிறைவேற்றும் வகையில் ஒரு கூட்டம் 9.3.1924 ல் நடத்தப்பட்டது. டாக்டர் அம்பேத்கர் வாழ்வும் மேற்கொண்ட பணிகளும் பக்கம் 63 தனன்ஜெய்கீர் எழுதியது.

திருவாங்கூர் ராஜ்யத்தில் உள்ள வைக்கம் எனும் ஊரில் தாழ்த்தப்பட்டவர்கள் சில தெருக்களில் நடமாடக்கூடாது என்று உயர் வகுப்பினரால் தடுக்கப்பட்டதைக் கண்டித்து அமைதியான முறையில் தாழ்த்தப்பட்டவர்களுக்காகப் பார்ப்பனரல்லாத தலைவர் திரு.இராமசாமி நாயக்கர் நடத்திய போராட்டம் 1924 ஆம் ஆண்டின் நிகழ்ச்சிகளில் சிறப்பாக நினைவில் நிற்கக் கூடியது!

அம்பேத்கர் அவர்கள் மிகுந்த கவனத்துடன் இதனைக் கவனித்து வந்தார். சில மாதங்கள் கழித்து மத சத்தியாக்கிரகம் பற்றி எழுதிய தலையங்கங்களில் ஒன்றில் வைக்கம் போராட்டம் பற்றி நெஞ்சு நெகிழ்ந்து குறிப்பிட்டு எழுதுகிறார் - தனன்ஜெய்கீர்

டாக்டர் அம்பேத்கர் வாழ்வை வரைபவரே மேற்கண்ட ஆங்கில நூலில் விளக்கமாக எழுதியுள்ளார். தந்தை பெரியார் அவர்கள் நடத்திய வைக்கம் போராட்டத்தைக் கூர்ந்து கவனித்து வந்த டாக்டர் அம்பேத்கர் அவர்கள் பின்னாளில் தன்னுடைய சமூகத்திற்கு ஆவன செய்தார் என்பது வெள்ளிடைமலை.

அய்யா அவர்களின் வாழ்க்கையில் தாழ்த்தப்பட்டவர்களுக்காகவே போராடிய போராட்டங்கள், பேசிய பேச்சுகள், எழுதிய எழுத்துகள் ஏராளம் ஏராளம்! அவைகளைத் தொகுத்துக் கொடுத்தால் அத்தியாயம் அத்தியாயமாக மாறும்.

(நூல் - தந்தை பெரியாரும்  தாழ்த்தப்பட்டோரும்! ஆசிரியர் தஞ்சை ஆடலரசன்)

Comments

Popular posts from this blog

ஜாதியை உருவாக்கியவர்கள் ஆரியர்களா? வடுகர்களா?

பறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன?